Friday, October 7, 2011

பெண்களை கேவலபடுத்தும் சினிமா பாடலாசிரியர்கள்


பெண்ணியத்திற்கும் அதன் கண்ணியத்திற்கும் எதிராக எழுதித் தள்ளும் திரைப்பட கவிஞர்கள் பற்றியும் அவர்களின் பாடல்வரிகள் பற்றியும் ஓர் அலசல்!

திரைப் படங்கள், இவை ஆக்ரமிக்காத, தொட்டுப் பார்க்காத மனித மனங்கள் அகில உலகிலும் மிகக் குறைவு. பிற எல்லாவற்றையும் விட மனித மனங்களை கவர்ந்திழுக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உண்டு. இந்திய சுதந்திரத்துக்கு முன்பும் அதற்குப் பிறகு வந்த காலகட்டங்களிலும் கூட திரைப்படங்கள் ஓரளவு நாட்டின் மீதான தாகத்தையும், நேர்மையான ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்களையும் மக்களுக்குப் படம் பிடித்துக் காண்பித்தன. குடும்ப உறவை பேணுதல், கணவன் மனைவிக்கு மத்தியிலான கட்டுபாடான வாழ்க்கை முறை, குழந்தைகள் மீதான அக்கறை - கவனம் என்று திரைப்படங்கள் இந்திய சமூக அமைப்பை வலுப்படுத்தும் முகமாகவே படமாக்கப்பட்டன. வரம்பு மீறல்கள் இருப்பின் அவை தணிக்கைக் குழுவால் வெட்டி எரியப்பட்டன.

அனைத்துப் படங்களும் இதே அடிப்படையில் வந்தவைதான் என்று நாம் சொல்லவில்லை. பல திரைப்படங்கள் வெறும் பொழுதுப் போக்கிற்காகவே எடுக்கப்பட்டு திரையிடப்பட்டன. ஆனாலும் அவை மற்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் போல மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.

பழங்கால திரைப்படங்களில் வேலை செய்த அனைவருமே தங்களுக்குத் தாங்களே சமூக பொறுப்பையும் அக்கறையையும் அதிகமாக சுமந்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு அப்படங்களின் கதை காட்சி அமைப்பு - பாடல்கள் போன்றவை சாட்சியாகின.

இன்றைக்கு திரைப்படத் துறை படுவேகமாக வளர்ந்து விட்ட நிலையில் அதோடு சேர்ந்தே சீரழிவும் வளர்ந்துள்ளது என்பதற்கு திரைக்கதை - காட்சி அமைப்பு - பாடல்கள் என்று எல்லாமும் ஆதாரமாக இருக்கின்றன.

திரைக்கதைப் பற்றிய விமர்சனங்களை விட தமிழ்ப்படங்களில் இடம்பெரும் பாடல்கள் அதற்கான காட்சி அமைப்புகள் ஆகியவையே அதிகப்படியான கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில் பார்வையாளனின் மனத்திரையில் திரைப்படங்களின் மொத்த காட்சிகளை விட பாடல் வரிகளும் அந்த பாடல்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பின்னணி காட்சிகளுமே ஆழமாகப் பதிகின்றன. பாடல்களே மீண்டும் மீண்டும் தொலைகாட்சிகளில் - வானொலிகளில் ஒலி - ஒளிப்பரப்பப் படுவதால் அதன் ஆழம் இன்னும் அழுத்தமாகின்றது.

எது ஒன்றும் மக்களிடம் எந்த அளவிற்கு சென்றடைகின்றதோ அந்த அளவிற்கு அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 'மீடியாக்காரர்களுக்கு' நாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல் வரிகளை உருவாக்குபவர்களுக்கு உண்மையிலேயே கூடுதல் மனிதத்துவ சிந்தனை இருக்க வேண்டும். மெட்டுக்கு ஏற்ற மாதிரி வார்த்தைகளைப் போட்டு பாடலை எழுதி விடலாம் என்று பாடலாசிரியர் நினைத்தால் அதுவே அவர்களின் கொள்கையின்மையையும் அடிமைத்தனத்தையும் படம் பிடித்துக் காட்டி விடும்.
இருப்பினும் சில பாடலாசிரியர்கள் கண்டனத்திற்குள்ளாகும் போது 'நாங்கள் என்ன செய்வது.. மெட்டுக்கு ஏற்றது போன்று பாடல் எழுத வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டதே..' என்று தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதை அவர்களின் பேட்டிகளை படிக்கும் போதோ - பார்க்கும் போதோ அறியலாம்.

இவர்கள் சொல்வது போல மெட்டுக்கு பாட்டு எழுத வேண்டும் என்பது காலத்தின் நிர்பந்தம் என்று அவர்களுக்காக வைத்துக் கொண்டாலும் பாடல் வரிகளின் மீதும் வார்த்தைகளின் மீதும் எத்தகைய நிர்பந்தமும் இல்லை. அதை தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. வார்த்தைகளில் ஏற்படும் விபரீதங்களே அழுத்தம் வாய்ந்தவையாகும்.

இசையை ரசிக்கத்தான் முடியும் அதை சிந்திக்க முடியாது. ஆனால் பாடல் வரிகளை ரசிக்கவும் முடியும் சிந்திக்கவும் முடியும் செயல்படுத்தவும் முடியும். அத்தகைய பாடல் வரிகளில் ஏராளமானவை 'பெண்மைக்கு எதிராகவே' திரைப்படங்களுக்காக எழுதப்பட்டு வருகின்றன.

பெண் என்பவள் வர்த்தகத்திற்கு ஏற்ற கவர்ச்சிப் பொருளாகவே ஆணாதிக்க சிந்தனையில் எப்பொழுதும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளது எண்ணங்கள் உணர்வுகள் எதுவொன்றும் அவளது புறத் தோற்றம் பற்றிய ஆண்களின் சிந்தனைக்கு முன் தொடர்ந்து தோல்வியைத் தான் தழுவுகின்றன.

எங்கும் பெண் - எதிலும் பெண் என்ற நிலை உருவாகி வருவது அவளது கல்வி, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றிற்கு கிடைத்துள்ள வெற்றியாக இன்றைக்கும் கருத முடியாது. அப்படியே கருத வேண்டி வந்தாலும் அதில் ஓரளவே நியாயமிருக்கும். அதை கடந்த அனைத்துமே அவளது உடல் தோற்றத்திற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வெற்றியேயாகும். இத்தகைய வெற்றியை கொடுப்பதில் நாங்கள் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் தான் தமிழ் பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதி வருகின்றார்கள்.

'எப்படி எப்படி சமஞ்சது எப்படி.. சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி..' என்று ஒரு பாடல் தமிழகத்தில் வெளி வந்த தருணங்களில் 'பெண்மை கேள்விக்குறியாக்கப்பட்டது'. அந்தப் பாடலால் பெண்கள் அனுபவித்த சீண்டல்களும் தொல்லைகளும் ஏராளம்.

வீடு, வீதி, அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் என்று அனைத்துத் தரப்புப் பெண்களுக்குப் பின்னாலும் வக்கிர ஆண்களால் இந்தப் பாடல் வரிகள் மெதுவாகவோ சப்தமாகவோ முனு முனுக்கப்பட்டன.

இளமைப் பருவம் என்பது வாழ்வில் முக்கியமானப் பகுதியாகும். அது பக்குவப்படுத்த வேண்டிய காலகட்டம் என்றாலும் 'வயசுக் கோளாறு' என்ற வார்த்தையால் இளமைப் பருவம் எத்தகைய தவறிலும் ஈடுபடலாம் அது தப்பில்லை என்ற மன நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய போதனையே பாடலாசிரியர்களின் வரிகளில் வெளிப்படுகின்றன.

சைட் அடிப்போம் தம்மடிப்போம்தண்ணியதான் கலந்தடிப்போம்
புக்ஸ் மட்டும் எடுக்கவே மாட்டோம் (பார்த்திபன் கனவு)

சின்ன சின்ன அத்துமீறல்கள்
அது கொலைக் குற்றமாகாது (தமிழன்)

'புத்தகங்கள் வகுப்பறைகள் டார்ச்சர்களே..' என்று வைர முத்து எழுதுகிறார் (ஆசை ஆசையாய்)
'லைபாய் இருக்குமிடம் ஆரோக்யம் தான் ஒரு பிளேபாய் ஆகுமிடம் காலேஜ் தான்' என்று விஜய் எழுதுகிறார் (ஏப்ரல் மாதத்தில்)
'இவ கட்டுடலு ஒரு கல்லூரிதான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா..' என்று கபிலன் எழுதுகிறார் (யூத்)

'உனக்குப் பிடிச்சா அள்ளு அள்ளுஊரு கெடக்கு தள்ளு தள்ளு''ஆடுகிற வயசில்ஆடித்தான் பார்க்கணும் அள்ளுஅட்வைஸ் பண்ணி எவனாச்சும்
வந்தான்னா தள்ளு' இது வாலியின் உபதேசம் (பகவதி)

கல்லூரிகளுக்கும் கல்விக் கூடங்களுக்கும் இதை விட கேவலம் வேறு என்ன வேண்டும். சைட் அடித்து தம்மடித்து தண்ணியையும் கலந்தடித்து சின்ன சின்ன அத்துமீறல்கள் தப்பில்லை என்ற பாடத்தை மாணவர்கள் பாடலாசிரியர்களிடமிருந்துப் பெற்றதால் தான் சரிகா ஷா உட்பட பல இளம் பெண்கள் கல்லுரியிலிருந்து கல்லறைக்குப் போனார்கள்.

இத்தகையப் பாடல்களால் அதை எழுதி வரும் பாடலாசியரியர்கள் எத்தகைய மன - கருத்தோட்டங்களில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் - குறிப்பாக சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் - விளங்க வேண்டும்.

பாடல்களுக்கு ரசனையும் மன கிளர்ச்சியும் தான் முக்கியம் என்ற மன பக்குவத்தை திரைப்பாடல்கள் நமக்கு ஊட்டி விட்டதால் தான் அதன் கருத்துக்களையோ தாக்கங்களையோ நாம் கண்டுக் கொள்ளாமலிருக்கிறோம். இதுவே பாடலாசிரியர்கள் தங்கள் சிந்தனா போக்கில் வடிகட்டிய பெண் அடிமைத்தனத்தையும் பாலியல் வக்கிரங்களையும் நிறைத்துக் கொள்ள தூண்டுகோலாக அமைந்து விடுகின்றது.

'மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை' (ஜெமினி)

'லைசென்ஸ் இல்லாத யாரைப் பார்த்தாலும்
லவர் இவளென்று தோணுது' (தமிழன்) போன்ற வரிகளை வைரமுத்து பாடலாக்கியுள்ளார்.

இந்த வரிகளில் அப்பட்டமாக பெண்களுக்கு எதிரான 'வன்முறைகள்' தூவப்பட்டுள்ளது.

மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை என்ற போதனை ஓர் இளைஞனின் மனதில் பதிந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது மேட்டுக் குடியாக வாழும் வைரமுத்து(க்கள்) குடும்பத்துப் பெண்களல்ல. ஏனெனில் அவர்களை பணம் என்ற மெய்க்காப்பாளன் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வான். அடுத்தக் கட்ட மக்களே அனைத்திலும் பாதிக்கப்படுவது போன்று இது போன்ற தூண்டல்களால் ஏற்படும் பாதிப்புகளிலும் அவர்களே சிக்குவார்கள். சிதைக்கப்படுவார்கள்.

'லைசென்ஸ் இல்லாத எவரும் லவர்' என்ற வக்கிர எண்ணத்தில் இருக்கும் வைரமுத்து அதை போதனையாகவும் முன் வைக்கிறார். தாலி என்ற சடங்குத் தேவையில்லை என்ற முற்போக்கு சிந்தனையில் திருமணம் செய்து கொண்டவர்களையும், திருமணமே செய்யப்படாதவர்களையும் திரும்பிப் பார்க்கலாம்-தீண்டலாம் என்ற கருத்தைத் தவிர வேறு எந்த கருத்தையும் இந்த வரி முன் வைக்கவில்லை.

பெற்றவளும் பெண் - உடன் பிறந்தவளும் பெண் - மனைவியும் பெண் - மகளும் பெண் என்ற பெண்ணிய உணர்வு துளியாவது இருந்தால் இது போன்ற வக்கிரங்கள் யார் மனதிலும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால் திரையுலகம் என்பது பாலியல் கூடாரமாகி விட்டதால் அங்கு பிரசவமாகும் எது ஒன்றும் அந்த வாடையைத் தான் பெற்றிருக்கும் என்பதை மெய்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் பாடலாசிரியர்கள்.

'மண்ணில் உள்ள பொருள் என்னவென்றுசெயற்கைக் கோள்கள் தேடும்ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்னவென்று
என் கண்கள் தேடும்' (வைரமுத்து - தமிழன்)

'பொண்ணுங்க முகங்களை பார்க்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்' (விஜய் - ஏப்ரல் மாதத்தில்)

'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..' (விஜய் - சமுத்திரம்)

'ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு' (வைரமுத்து - ஜெமினி)

இதுபோன்ற வரிகள் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மனதில் மௌனமாகவே பெரும் போராட்டத்தையும், சஞ்சலத்தையும், அத்துமீறலையும் கண்டிப்பாகவே ஏற்படுத்தும்.

ஆபாசம் என்பது 'பச்சையாக கதை எழுதுவதற்கும் - காட்சி அமைப்பதற்கும் மட்டுமே கொடுக்க வேண்டிய முத்திரையா.. பாடல்களுக்கு அது பொருந்தாதா..

'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..
தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.' போன்ற வரிகள்,

'கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு, குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு..' (வைரமுத்து) போன்ற வரிகள்,

'நாயுடுஹாலா மாறிவிட நாங்க ரெடி எங்கள மார்போடு சேர்த்துக் கொள்ள நீங்க ரெடியா' போன்ற வரிகள் இவைகள் போதிக்க வரும் அறிவுரைதான் என்ன..? இவை ஆபாச சந்தையில் விற்பனையாகும் விபச்சாரமாகாதா?.. அல்லது இதற்கு வேறு என்ன பெயர் கொடுப்பது?

பெண் என்பவளை 'ஒரு சீண்டல் அடையாளமாகவே' முன்னிருத்தி வரும் இது போன்ற பாடல்கள் தணிக்கைச் செய்யப்பட வேண்டும். பேருந்துகள் உட்பட பெண்கள் நிறைந்துள்ள இடங்களில் இதுபோன்ற பாடல்கள் ஒலி பரப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும். காமத்தை பாடலாக்கி பணம் பண்ணும் பாடலாசிரியர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளும் விதத்தில் வெகுஜன நெருக்கடி ஏற்பட்டாக வேண்டும்.

பாடல்தானே பிடித்தால் ரசிப்போம் பிடிக்காவிட்டால் ஒதுங்கிச் செல்வோம் என்ற மனநிலையை நாம் பின்பற்றினால் ஈவ்டீஸிங்கால் பாதிக்கப்படும் பெண்களின் குரலுக்காக திறக்கப்படவிருக்கும் நீதிமன்றக் கூண்டுகளில் பாடலாசிரியர்களுடன் நாமும் ஏற வேண்டி வரும் எச்சரிக்கை!

---பரங்கிப்பேட்டை. ஜி.என்


ராஜா ஏதோ சில உருப்படியான விஷயங்கள் பேசுகிறார் கேளுங்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன